Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எர்ணாகுளம் அருகே பொது இடத்தில் போதை ஊசி பயன்படுத்திய 2 பேர் கைது

திருவனந்தபுரம், ஜூன் 6: எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் பொது இடத்தில் வைத்து போதை ஊசி பயன்படுத்திய 2 வட மாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரில்தான் கேரளாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் மிக அதிகமாக உள்ளது. போலீசார் அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகின்றபோதிலும் போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் பெரும்பாவூரில் ரோட்டில் வைத்து 2 வட மாநில தொழிலாளர்கள் போதை ஊசி பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பிரபல மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் உடனடியாக போலீசுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வீடியோ கிடைத்தவுடன் பெரும்பாவூர் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தீவிர விசாரணையில் பொது இடத்தில் வைத்து போதை ஊசி பயன்படுத்திய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனுமல் ஹக் (29) மற்றும் அசருல் இஸ்லாம் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 6 பாட்டில் ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்த விவரத்தை நடிகர் உண்ணி முகுந்தன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இவருடைய இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.