கோபி,ஆக.5: கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சி 9வது வார்டு தண்டலூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து தரப்படவில்லை. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிப்பறை கழிவுகள் சாலையில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி நோய்களை பரப்புகிறது. இதுகுறித்துஅப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நம்பியூர் பேரூராட்சி மற்றும் காவல்துறையிடம் பல முறை புகார் மனு அளித்தும் கடந்த 6 மாதமாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் நேற்று மாலை சாலையின் நடுவே படுத்து மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அவரிடம் கழிவுநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் மறியலில் விலக்கிக் கொண்டார்.
+


