காங்கயம், ஆக. 5: காங்கயத்தில் முறையான குடிநீர் விநியோகம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்ட மூலமாகவும், அமராவதி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஆங்காங்கு போர்வெல் அமைத்தும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காங்கயம் தாராபுரம் ரோடு 13வது வார்டு அண்ணாநகர் பகுதியில் குடிநீர் கடந்த 10 நாட்களாக விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியது நிலை உள்ளது.
இதனால், முறையான குடிநீர் விநியோகம் கோரி நேற்று காங்கயம்-தாராபுரம் ரோடு களிமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் நகராட்சி பொறியாளர் குணசீலன், காங்கயம் நில வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவாக குடிநீர் வழங்குவதாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டுச் சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


