ஊட்டி, செப். 5: பணியிட மாறுதல் உத்தரவு வந்து 3 மாதங்களாகியும் விடுவிக்காமல் அலட்சியமாக இருக்கும் மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து ஊட்டியில் கேங்க்மேன்கள் நேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கேங்க்மேன்கள் நியமிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட கேங்க்மேன்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நீண்டகாலமாக தங்களது சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கேங்க்மேன் ஊழியர்களுக்கு அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கே பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களின் பணியிட மாறுதல் உத்தரவிற்கு விடுவிப்பு ஆணை வழங்காமல் மின் வாரிய நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உடனடியாக விடுவிப்பு ஆணை வழங்கக்கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பணியிட மாறுதல் உத்தரவு ஆணை விரைவில் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கேங்க்மேன் ஊழியர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான கேங்க்மேன்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 12 மணியளவில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்தேதியிட்டு இன்று (நேற்று) விடுவிப்பு ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சூழலில் நேற்று கேங்க்மேன்கள் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் எந்த அலுவலர்களும் அலுவலகத்திற்கு வரவில்லை. ேமலும் முறையான பதில் கூறாமலும் இருந்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த ஊழியர்கள், ஊட்டியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியத்திற்கு பின் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் கூறுகையில், ‘‘ஆணை பிறப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணி விடுப்பு செய்வதாக 3 முறை மின்வாாிய நிர்வாகம் ஏமாற்றியுள்ளது. இந்த முறை நாங்கள் ஏமாற தயாராக இல்லை. இந்த பிரச்னையில் உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.
புலி நடமாட்ட காட்சி வைரல்
மனிதர்கள் புலி தாக்கிக் கொன்ற லாரஸ்டன் நம்பர் 4 பகுதியை அடுத்த சபோக் எஸ்டேட் பகுதியை ஒட்டிய பல்மாடி தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை புலி நடமாடும் காட்சி ஒன்று செல்போன்களில் வெளியாகி வைரலானது. இது மனிதர்களை கொன்ற ஆட்கொல்லி புலியா? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


