Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கூடலூர் அருகே 2 பேர் பலியான பகுதிக்கு அருகே புலி நடமாட்டத்தை பார்த்த பொதுமக்கள்

கூடலூர், செப்.5: கூடலூர் அருகே 2 பேர் பலியான பகுதிக்கு அருகே உள்ள கெவிபாறை பகுதியில் புலி நடமாடியதை பொதுமக்கள் பார்த்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த புலி 2 பேரை பலி கொண்ட ஆட்கொல்லி புலியாக இருக்குமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் 2 பேரை புலி தாக்கிக்கொன்றது. மனிதர்களை வேட்டையாடிய அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புலியை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் 15வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் காமராஜர் நகர் பகுதியை ஒட்டிய கெகவிபாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மேல் பகுதியில் பாறையில் புலி இருப்பதை குடியிருப்புகளில் வசித்தவர்கள் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திடீரென அந்த பகுதியில் குரங்குகளின் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது பாறையில் புலி அமர்ந்திருந்ததை மக்கள் பார்த்துள்ளனர். பொதுமக்கள் பார்த்த சிறிது நேரத்தில் அந்த புலி அங்கிருந்து மறைந்தது. இது தொடர்பாக ஆட்கொல்லி புலியின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மனிதர்களை புலி வேட்டையாடிய பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் புலி நடமாட்டம் தென்பட்டதாகவும், அதை மக்கள் பார்த்ததாக கூறியதாலும் அது ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் பார்த்தது ஆட்கொல்லி புலியா? என்பதை உறுதிப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டம் இருந்ததாக கூறப்படும் பகுதியை தற்போது வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இங்குள்ள புதர்கள் மற்றும் பாறை இடுக்குகளுக்குள் புலி மறைந்திருக்கலாம் என்பதால் தேடுதல் பணிகளில் ஈடுபடும் வனத்துறையினர் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய வனத்துறை ஊழியர்களும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் லாரஸ்டன் நம்பர் 4 பகுதியை சுற்றியுள்ள லாரஸ்டன், சபோக், பல்மாடி, பாரம், குயின்ட், சான்ட்ஹில்ஸ் தேயிலை காப்பி தோட்டங்களிலும், காந்திநகர், பெரியசூண்டி, பாலவாடி, காமராஜர் நகர், மேல் கூடலூர், சில்வர் கிளவுட், கோக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளையும் வனத்துறையினர் செய்து வருகின்றனர். இந்த பகுதிகள் முழுவதும் லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் உள்ளதால் புலி இந்த பகுதிகளுக்கு இடம்பெயரலாம் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.