Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரியில் பெய்து வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரிப்பு

ஊட்டி, ஜூன் 4: நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதால், சிறிய அளவிலான தோட்டங்களை வைத்துள்ளனர். இவர்கள் நாள்தோறும் தங்களது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறித்து அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் அதிகரிக்கும்.

இதன்மூலம், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனிப்பொழிவு மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை மகசூல் குறையும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டம் கடந்த மாதம் சில நாட்கள் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை பெய்தால், தேயிலை மகசூல் மேலும் அதிகரிக்க வாயப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.