குன்னூர்,அக்.2: குன்னூர் மலைப்பாதையில் விதிமீறி பசுக்கள் கடத்தியதை கண்டித்து பொதுமக்கள் சிறைபிடித்தனர்.குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் மாடுகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி ஒரு சரக்கு வாகனத்தில் 3 மாடுகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும் தீவனம், தண்ணீர் வசதி மற்றும் மருத்துவச் சான்றுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இதுகுறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள், குன்னூர் மலைப்பாதையான டபுள் ரோடு பகுதியில் அந்த வாகனங்களைச் சிறைபிடித்தனர்.
மொத்தம் 12 பசுமாடுகளுடன் வந்த 2 சரக்கு வாகனங்களை ரோந்துப் பிரிவு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அதில் ஒரு வாகனத்தில் முன்பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும் (TN.43.D.4074), பின்புறத்தில் வேறொரு பதிவு எண்ணும் (TN.66.X. 1181) பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த வாகனம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார், மாடுகள் ஏற்றி வந்த 2 வாகனங்கள் மற்றும் அதில் வந்த நபர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


