குன்னூர்,அக்.2: குன்னூர் அருகே பள்ளத்தில் சறுக்கி விழுந்து காயமடைந்த காட்டுமாடு உயிரிழந்தது.குன்னூர் அருகே உள்ள பாபு வில்லேஜ் கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு மாடு ஒன்று உலா வந்தது.நேற்று காலை அங்குள்ள புல் மைதானத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த காட்டுமாடு, எதிர்பாராதவிதமாக பள்ளத்தை கவனிக்காமல் சறுக்கி விழுந்தது. இதில் காட்டுமாட்டின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, எழுந்து நடக்க முடியாமல் அவதியுற்றது.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால்,வலியால் துடித்துக்கொண்டிருந்த காட்டுமாட்டிற்கு அப்பகுதி மக்கள் நீர் வழங்கியும், முதலுதவிகள் செய்தும் காப்பாற்ற முயன்றனர்.எனினும் காட்டுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்,கால்நடை மருத்துவர் மூலம் காட்டுமாட்டின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே புதைத்தனர்.

