Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஊட்டி சாமுண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, ஜூலை 2: ஊட்டி சாமுண்டி பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  ஊட்டி நகரின் முக்கிய சாலையாக எட்டினஸ் சாலை உள்ளது. இவ்வழித்தடம் வழியாகவே கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்கும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்கின்றன. மேலும், இப்பகுதியில் அங்கன்வாடி, சர்ச் மற்றும் பள்ளிவாசல் ஆகியவை அருகருகே உள்ளது. ஆனால், இப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் எந்நேரமும் மதுப்பிரியர்கள் கூட்டம் காணப்படுகிறது.

மேலும், மது வகைகளை வாங்க இச்சாலையில் வாகனங்களையும் நிறுத்தி விடுகின்றனர். இதனால், எப்போதும் இச்சாலையில் சாமுண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அரசு பஸ்கள் குறித்த நேரத்திற்கு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் மதுக்கடை உள்ளதால், சர்ச்சிற்கு செல்பவர்கள், அங்கன்வாடி செல்பவர்கள் மற்றும் பள்ளி வாசலுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, சாமுண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு ஒன்றையும் அப்பகுதி மக்கள் அளித்துள்ளனர். தமிழக அரசு கடந்த மாதம் சில மதுக்கடைகளை மூடியது. ஆனால், இந்த மதுக்கடைக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தும் மூடப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.