Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூரில் முன் அறிவிப்பின்றி மினி பேருந்து கட்டணம் உயர்வு

குன்னூர், ஜூலை 2: குன்னூரில் முன்னறிவிப்பின்றி மினி பேருந்து கட்டணம் உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 8 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கு குறைந்தபட்ச பயணக் கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயிக்கப்பட்டு, அதன்படியே பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி, நேற்று முதல் குன்னூரில் இயக்கப்படும் அனைத்து மினி பேருந்துகளிலும் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பேருந்துகளின் உள்பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு, கட்டண உயர்வுக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ரூ.10 ஆக இருந்த பயணக் கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்த்தப்பட்டு பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக வேறு வழியின்றி இந்தக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென 5 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.