Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மஞ்சூரில் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து உயர்வு

மஞ்சூர், ஜூன் 2: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட 8 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இதுதவிர ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து பெருமளவு சரிந்ததால் தேயிலை துாள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆரம்பத்திலேயே துவங்கி இடைவெளி விட்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வெயிலும், மழையுமாக தேயிலை விவசாயத்திற்கு ஏற்ற காலநிலை ஏற்பட்டதால் தேயிலை மகசூல் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளதாக தொழிற்சாலைகள் தரப்பில் கூறப்படுகிறது.