ஏர்வாடி, செப்.25: ஏர்வாடி அருகேயுள்ள வாகைகுளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சிதம்பரம்(22). இவர் மும்பையில் இட்லி கடையில் வேலை பார்த்து வருகிறார். சிதம்பரம் அதே ஊரைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அருகே உள்ள மற்றொரு ஊருக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் அந்த மாணவி அதே பள்ளியில் 11வது படிக்கும் மாணவரிடம் பேசி பழகியுள்ளார். இதை அறிந்த முன்னாள் காதலன் சிதம்பரம், அவரது நண்பர் வாகைகுளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இசக்கிதுரை (20) ஆகிய இருவரும் சேர்ந்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் உன்னால்தான் என்னிடம் காதலி பேச மறுக்கிறாள் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


