களக்காடு, அக். 22: களக்காடு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணை நேற்று மூடப்பட்டது. திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கும் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. களக்காடு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் தலையணை மூடப்பட்டது. தலையணையில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுபோல திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


