Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து 150 வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய குரங்குகள்

களக்காடு,ஆக.21: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்தன. இதில் 150 வாழைக் கன்றுகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை, காமராஜ்நகரை சேர்ந்தவர் சாமுவேல் மகன் ஸ்டீபன் (33). விவசாயியான இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு அருகே உள்ள அரசபத்தில் உள்ளது.

அதில் அவர் ஏத்தன் ரக வாழைகள் பயிர் செய்துள்ளார். இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் அவரது விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகளை விரட்ட விவசாயிகள் முயற்சி செய்தனர். ஆனால் குரங்குகள் கூட்டமாக பாய்ந்து வந்ததால் விவசாயிகள் முயற்சி பலனளிக்கவில்லை. குரங்குகள் கூட்டம் வாழைக்கன்றுகளை பிடுங்கி, அதன் குருத்துகளை தின்றன.

இதனால் 150 வாழைக்கன்றுகள் சேதமடைந்தது. இவைகள் பயிர் செய்யப்பட்டு 1 மாதமே ஆன வாழைகள் ஆகும். வாழைக்கன்றுகள் நாசமானதால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. குரங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களில் புகும் குரங்குகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.