சிவகிரி, ஆக.13:சிவகிரி சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் இனாம்கோவில்பட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 41 கிலோ 400 கிராம் புகையிலை பாக்கெட் மற்றும் ரூ.3780 மதிப்புள்ள 27 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த இனாம் கோவில்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த செல்லச்சாமியை கைது செய்தனர்.
இதேபோல் அவ்வழியாக வந்த ஒரு பைக்கை சோதனையிட்ட போது ரூ.7200 மதிப்புள்ள 60 புகையிலை பாக்கெட் இருந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் இனாம் கோவில்பட்டி கீழ தெருவைச் சேர்ந்த அன்னசாமி என்பவரை கைது செய்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.


