சங்கரன்கோவில், ஆக. 5: சங்கரன்கோவில் அருகே ஆடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்திச்சென்ற 17வயது சிறுவனை கைதுசெய்த போலீசார் மேலும் கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டார்குளம், தட்டாங்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஆடுகள் மர்மநபர்களால் திருடப்பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த சின்ன கோவிலாங்குளம் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் உள்ளிட்ட 4 பேர் ஆடுகளை திருடி லோடுஆட்டோ மூலம் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இதில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை கைதுசெய்த போலீசார், ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் கூட்டாளிகள் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


