கடையம்,அக்.2: கடையம் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடையம் பாரதி நினைவு நகர், வாசிகிரிமலை ரோடு அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் குரங்குகள் குழந்தைகள், பெரியவர்களை அச்சுறுத்தி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களைப் பிடுங்குவது, மக்களைத் துரத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளைப் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையம் பகுதியில் குரங்குகள் தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

