களக்காடு,செப்.17: களக்காடு அருகே நாராயணசுவாமி கோயிலில் நடந்த தேரோட்டத்தில் திரளானோர் வடம் பிடித்து நிலையம் சேர்த்தனர். களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடித்தட்டு உலகளந்தநாதன் நாராயணசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளன்று நடந்தது. இதனைதொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. உகப்படிப்பு வாசிக்கப்பட்டது. அதன் பின் அய்யா நாராயண சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா நாராயண
சுவாமிக்கு சுருள் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக வாணவேடிக்கை இடம்பெற்றது.


