நெல்லை, செப்.17: நெல்லை, தென்காசி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஏர்வாடி திருமலைக்குமார்,கல்லிடைகுறிச்சி பாலசுந்தர், பத்தமடை கந்தசாமி, கோபால சமு த்திரம் பரமசிவம், அம்பை நகராட்சி ஆணையாளர் (கூடுதல் பொறுப்பு) சரவணன், தென்காசி மாவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் சாம்பவர்வடகரை விமலா ஸ்டெல்லா பாய், மேலகரம், இலஞ்சி அமானுல்லா, குற்றாலம் மாணிக்கராஜ், ஆய்க்குடி தமிழ்மணி, திருவேங்கடம் சேகர், ஆழ்வார்குறிச்சி, கீழப்பாவூர் மாணிக்கராஜ் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை, தென்காசி மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில் இடம்பெற்ற அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சேகரமாகும் குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.வரும் அக்.1ம் தேதி முதல் பொதுமக்கள் 4 வகை குப்பைகளையும் தனித்தனியாக தரம் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட மாட்டாது. இதற்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 4 வகையான குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.எனவே பொதுமக்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கி, பேரூராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


