Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை பெட்ரோல் பங்கில் ரூ.33 லட்சம் கையாடல்

நெல்லை, ஜூன் 13: நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றிய பெண் ரூ.33 லட்சத்தை கையாடல் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் மானூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அங்குள்ள வரவு, செலவு கணக்குகளையும் மாரியம்மாள் பராமரித்து வந்தார். இந்நிலையில் ராஜன் தனது நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்த போது மாரியம்மாள் பல லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரியம்மாளிடம் ராஜன் கேட்டார். முதலில் ரூ.8 லட்சம் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டு அந்த பணத்தை அவர் ராஜனிடம் திருப்பி கொடுத்து விட்டாராம். இதனை தொடர்ந்து ராஜன் தனது நிறுவனத்தின் கடந்த 4 ஆண்டு கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்தார். அப்போது மாரியம்மாள் மொத்தம் ரூ.41 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல் கையாடல் செய்ததை ராஜன் கண்டுபிடித்துள்ளார். இதனால் மீதமுள்ள ரூ.33 லட்சத்து 20 ஆயிரத்தை திரும்பத் தருமாறு மாரியம்மாளிடம் ராஜன் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை செலவழித்து விட்டதாக மாரியம்மாளின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் போலீசில் புகார் அளித்தால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜன் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பெண் மேலாளர் மாரியம்மாள் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.