ராசிபுரம், ஆக. 26:ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் ஆணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்பு சாறு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வெண்ணந்தூர் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.



