சேந்தமங்கலம், ஆக. 21: கொல்லிமலை பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜா தலைமையில் அடங்கிய குழுவினர், நேற்று கொல்லிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து மளிகைக் கடைகளிலும் திடீர் சோதனை செய்தனர். அப்போது கீழ் சோளக்காடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தால், பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.



