சேந்தமங்கலம், ஆக. 13: சேந்தமங்கலம், எருமப்பட்டியில் சந்து கடையில் மது விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சேந்தமங்கலம் காமராஜபுரத்தில், சந்து கடையில் டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ சந்தியா தலைமையில் போலீசார், அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு மனைவி மாலதி (38) என்பவர், வீட்டின் பின்புறத்தில் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியில், போலீஸ் எஸ்ஐ துர்க்கை சாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சாய்ராம் நகர், தாட்கோ காலனி பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த தியாகு (39), ரஞ்சித்குமார் (43) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



