குமாரபாளையம், டிச. 9: மலைக்காடு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாதையை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில் உள்ள மலைக்காடு கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சென்று வரும் பாதை, தனியாருக்கு சொந்தமானது என அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் இந்த பாதைதான் மலைக்காடு மக்களுக்கு சென்றுவரும் எளிய வழி. தனியார் உரிமை கொண்டாடுவதை கண்டித்து கடந்த சில மாதங்கள் முன்பு, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் தலையிட்டு பிரசனையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இருந்த போதிலும் இதுவரை பிரசனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. இந்நிலையில், மலைக்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் பாதையை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
+
Advertisement


