சாலை விபத்தில் விவசாயி பலி
சேந்தமங்கலம், டிச. 9: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சி செல்லியாயிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (34). இவர் நேற்று முன்தினம் இரவு, பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக திருமலைபட்டி ஊராட்சி இருளப்பட்டியைச் சேர்ந்த ராஜா (48) என்ற விவசாயி, தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், ஈஸ்வரியின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜா, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.