மரத்தில் டூவீலர் மோதி டிரைவர் பலி
சேந்தமங்கலம், டிச. 3: கரூர் மாவட்டம், சோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலையன் மகன் தீனதயாளன்(30). இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தீனதயாளன் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த பழையபாளையம் கிராமத்தில் பொக்லைன் மூலம் மண்ணை சமப்படுத்தும் வேலை முடித்து விட்டு, நேற்று அதிகாலை தனது டூவீலரில் கரூருக்கு சென்றுள்ளார். எருமப்பட்டி அடுத்த புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.