Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கிரிவலத்திற்கு குவிந்த பக்தர்கள்

திருச்செங்கோடு, ஜூலை 30: ஆடி பவுர்ணமியையொட்டி, திருச்செங்கோட்டில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருமலையை சுற்றி 7 கி.மீ., தொலைவிற்கு கிரிவலப்பாதை உள்ளது. ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையை சுற்றி திரளான பக்தர்கள், குழந்தைகள் கிரிவலம் செல்வார்கள். ஆடி பவுர்ணமியையொட்டி திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கிரிவலம் செல்ல வந்தனர். திருமலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிசேகம் நடந்தது.

அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக போடப்பட்டிருந்த பேவர் பிளாக் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் இணைந்து அகற்றினர். தூய்மை பணியாளர்கள் மூலம் கிரிவலப்பாதை சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கலவை சாதம், குளிர்ந்த நீர், டீ, காபி, பானகம் வழங்கினர்.

அதே போல், ஆடி பவுர்ணமியையொட்டி திருச்செங்கோடு அருள்மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.