Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளி ஊழியரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது

பள்ளிபாளையம், ஜூன் 30: பள்ளிபாளையத்தில், பெட்ரோல் போட்ட பிறகு வண்டியை எடுக்காததை கண்டித்த மாற்றுத்திறனாளி ஊழியரை, சரமாரி தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். மாற்றுத்திறனாளியான இவர், காடச்சநல்லூர் அண்ணாநகரில் உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 3 வாலிபர்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்து, டூவீலரை பம்பின் முன் நிறுத்தினர். பெட்ரோல் போட்ட பின்னர், வண்டியை எடுக்காமல் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது.

பெட்ரோல் பங்க்கில் புகை பிடித்தபடி பேசிக்கொண்டிருந்த அவர்களிடம், டூவீலரை எடுக்குமாறு காளீஸ்வரன் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல், காளீஸ்வரனை சரமாரி தாக்கினர். இதில், காயமடைந்த அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு பங்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் உதவிக்கு ஓடி வரவே, வாலிபர்கள் மூவரும் டூவீலரில் ஏறி தப்பினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, பங்க் உரிமையாளர் பாலாஜி பள்ளிபாளையத்தில் உள்ள சக பெட்ரோல் பங்குகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பங்க் உரிமையாளர்கள் திரண்டு, பள்ளிபாளையம் காவல் நிலையம் வந்தனர்.

நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்த அவர்கள், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து பெட்ரோல் பங்கிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிந்து விசாரித்து, பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில், விற்பனையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த நவீன்(23), புதுப்பிள்ளையார் கோயில் வீதி மேகநாதன்(21), தாஜ்நகர் சூர்யா(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து, குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விசாரித்து 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.