Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடும் சாய கழிவுகள்

பள்ளிபாளையம், ஜூன் 29: அமைச்சரின் அதிரடி நடவடிக்கையையும் அலட்சியப்படுத்தி பள்ளிபாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயில் வெளியான சாய கழிவுகளால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் சாய கழிவுகளை வெளியேற்றி வந்த சாய ஆலைகள் கடந்த ஒரு மாதமாக கிடுக்கியில் சிக்கிய எலியைப்போல சிக்கி நடவடிக்கையிலிருந்து தப்ப வழியின்றி திணறி மிரண்டு கிடக்கின்றன. கடந்த 2ம் தேதி காலநிலை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜுவ்வின் நேரடி கள ஆய்வுக்கு பிறகு சாய கழிவுநீர் விவகாரம் வேகமெடுத்து படபடத்தது. இதைத்தொடர்ந்து நான்கு மாவட்ட சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவின் ஆய்வு ஆட்டம் காண வைத்தது. இதையடுத்து, சுறு சுறுப்பான மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் பள்ளிபாளையம் சாய ஆலைகள் அனைத்தும் ஒருவாரம் தாமகவே முன்வந்து நிறுத்தப்பட்டது.

சாயச்சாலை உரிமையாளர்கள் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து முறையிட்டனர். கண்காணிப்பு குழுவின் பரிந்துரை மீதான நடவடிக்கையினை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக சரிபார்த்து கழிவுநீரை சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டுமெனவும் அமைச்சர் தாராளம் காட்டினார். அதன் பின்னர் முழுவீச்சில் சாய ஆலைகள் இயங்கத் துவங்கின. பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் 5 மாதத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்ட ஒரு சாய ஆலை இரவு நேரத்தில் சீல் உடைத்து இயங்குவதாக வந்த புகாரின்பேரில் கடந்த திங்கள்கிழமை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். இதில், 6 முறை சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சீல் உடைத்து இயங்கிய சாய ஆலையின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, கண்காணிப்பு குழுவின் பரிந்துரை மீதான நடவடிக்கை தொடர்பாக ஒருமாத கால அவகாசத்தை ரத்து செய்வதாக அமைச்சர் அறிவித்தார். முழுமையாக கழிவுநீரை சுத்தப்படுத்தி வெளியேற்றும் சாய ஆலைகளை மட்டும் இயக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, உரிமம் பெற்ற சாய ஆலைகள் சில மட்டும் அதிகாரிகளின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த முன்னுரிமையை பயன்படுத்தி தற்போது அங்காங்கே சில ஆலைகள் கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் இரவு நேரத்தில் வெளியேற்றி வருகின்றன. நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இரவு பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாய ஆலையிலிருந்து சகிக்க முடியாத நெடியுடன் சாய கழிவுநீர் சாக்கடை கால்வாயில் வெளியேற்றப்பட்டது.

காலையில் கண்விழித்த மக்கள் தங்கள் பகுதியில் பயரங்கர பிளீச்சிங் வாட்டர் நெடியோடு வெளியேறும் சாய கழிவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் ஆய்வு, அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி கழிவுநீரை மீண்டும் வெளியேற்றும் சாய ஆலைகளின் செயல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் கழிவுநீரை கட்டுப்பாடின்றி வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து முடக்க வேண்டுமென முறையிடப்போவதாக தெரிவித்தனர்.