Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வெட்டப்பட்டு 15 நாளாகியும் அகற்றப்படாத மரக்கிளைகள்

பள்ளிபாளையம், ஜூன் 29: பள்ளிபாளையத்தில் வெட்டப்பட்டு பதினைந்து நாட்களாகியும் மரக்கிளைகள் அகற்றப்படாமல் வீதியிலேயே கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி பெரியார் நகரில் 8-9 வீதிகளின் இடையே உள்ள ஒரு மின்கம்பத்தில் வேப்பமரத்தின் கிளைகள் உரசியபடி இருந்தது. இதனால், மின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, 15 நாட்களுக்கு முன்பு மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. இந்த கிளைகள் அனைத்தும் வீதியின் ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி பணியாளர்களுக்கு தெரிவித்த போதிலும், அப்பகுதியில் உள்ள மற்ற குப்பைகள் மட்டும் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த மரக்கிளைகள் மட்டும் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் சாக்கடை மற்றும் காலியான பகுதிகளில் உள்ள எலிகள் இந்த குப்பைக்குள் புகுவதும், அதனை தேடி பாம்புகள் படையெடுப்பதும் அன்றாட நிகழ்வாகி விட்டதால் இரவில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். தாமதப்படுத்தாமல் இந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளியின் முன்னான் பிடிஏ தலைவர் பெரியார் நகரைச் சேர்ந்த மகுடேஸ்வரன் கூறுகையில், `மின் கம்பத்தில் மோதி இந்த கிளைகள் வெட்டப்பட்டு, 15 நாட்களாகியும் இங்கேயே கிடக்கிறது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தோம். குப்பை கிடங்கில் இடமில்லை. அதனால் இங்கேயே கிடக்கட்டும் என அலட்சியமாக பதில் தருகிறார். மக்களின் அன்றாட பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும்,’ என்றார்.