Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நாமக்கல், ஜூன் 29: நாமக்கல் மாவட்டத்தில் 1,192 மையங்களில் நேற்று 1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை சார்பில், நாடு முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,192 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாநகராட்சி போதுப்பட்டி தில்லைபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நலவாழ்வு மையம் முன் பெரிய அளவில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. இந்த மையத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட காலை 7 மணி முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வரத் தொடங்கினார்கள்.

ஆனால், அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் சுமார் 2.30 மணி நேரம் தாதமாக காலை 9.30 மணிக்கு முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து முகாமை தொடங்கி வைத்து 5 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். அப்போது, அமைச்சருடன் வந்த தவெகவினர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் தாய்மார்கள் குழந்தைகளுடன் காத்திருந்ததால், ஒரு சில குழந்தைகள் பசியால் அழத் தொடங்கி விட்டனர். இதனால், பெற்றோர்கள் முகாம் நடைபெறும் இடத்தில் இருந்து எழுந்து வெளியேற தொடங்கினார்கள். அவர்களை நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் சமாதானம் செய்து, அமைச்சர் போகும் வரை, உட்காருங்கள் என கூறிக்கொண்டிருந்தார். பின்னர், 5 குழந்தைகளுக்கு அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் சொட்டு மருந்து புகட்டி விட்டு சென்ற பின்னர் மற்ற குழந்தைகளுக்கு, சுகாதாரத்துறை பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கினார்கள்.

இதனால், பெற்றோர் சுமார் 3 மணி நேரம் மையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தாய்மார்கள் கூறுகையில், `காலை 7 மணிக்கே குழந்தைகளுடன் வந்துவிட்டோம். அமைச்சர் வருவது பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது. கலெக்டர் வருகிறார் என அதிகாரிகள் கூறி, எங்களை நீண்ட நேரம் இருக்க வைத்து விட்டனர்,’ என்றனர். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க அமைச்சர் தாமதமாக வந்ததால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் திலீப், சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மையங்களை தயார் செய்வதில் தாமதம்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில், 80க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. எந்தந்த பகுதியில் மையங்கள் அமைக்கப்படுகிறது என்ற விபரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை வரை தெரிவிக்கவில்லை. இதனால், அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொண்டு மையங்களை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், மையங்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் செல்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்திலேயே முகாம் நடைபெற்றது. இந்த மையத்திற்கு காலை 8 மணிக்கே பிறகே சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் வந்தார். இதன் பின்னரே முகாம் நடைபெற்றது. இது போன்ற பல மையங்களில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யாததால் சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை.