Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நாமக்கல் கலெக்டர் ஆபீசை விவசாயிகள், மக்கள் முற்றுகை: 3 மணி நேரம் காத்திருக்க வைத்து பேச்சுவார்த்தை

நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாரைக்கிணறு பகுதியில் வருவாய்த்துறையால் சர்வே செய்யப்படாத விவசாய நிலத்தை, காப்புவனமாக மாற்றம் செய்ய வனச்சட்டத்தின் கீழ், தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த பகுதியில் பல தலைமுறையாக வசித்து வரும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த, வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டாவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆழ்துளை கிணறு அமைக்கவும் வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வாரமாக, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

வனத்துறையினர் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி வருவதால், நேற்று 500க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுடன், கலெக்டரிடம் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி, இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன், ஈரோடு குமார் உள்ளிட்டோரும் குவிந்தனர். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால், அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கயிறுகட்டி தடுத்து ரோட்டில் நிற்க வைத்தனர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், வயதானவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகினர். மனு கொடுக்க 5 பேர் மட்டும் உள்ளே செல்லலாம் என டிஎஸ்பி ராஜேஸ்வரன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையையும் கண்டித்து கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டர் நேரில் வந்து எங்களின் பிரச்னையை கேட்க வேண்டும் என கூறினர்.

இதனால், வருவாய் கோட்டாட்சியர் அங்கிருந்து சென்று விட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு பொதுமக்கள் வெயிலில் ரோட்டில் நிற்க முடியாமல், காவல்துறையின் தடுப்புகளை மீறி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். வளாகத்திலும் போலீசார் தடுப்புகள் வைத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத படி, தடுத்து நிறுத்தினர். மேலும், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், 1 மணியளவில், டிஆர்ஓ சரவணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலெக்டர் தான் வரவேண்டும். மற்றவர்களிடம் பேச தயாராக இல்லை என விவசாயிகள் கூறியதால், டிஆர்ஓ கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டார். நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் சோர்வடைந்த 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த கலெக்டர் மதுபாலன், மதியம் 2 மணியளவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க முன் வந்தார்.

இதையடுத்து போலீசார் சாலையில் நின்று கொண்டிருந்த அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து, கூட்ட அரங்கில் அமர வைத்தனர். அவர்களிடம் கலெக்டர் மதுபாலன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கலெக்டர் கூறுகையில், `இந்த பிரச்னைக்காக கடந்த வாரமும் 300 பேர் மனு அளித்தனர். நாரைக்கிணறு பகுதியில், அன்சர்வே செய்யப்படாத விவசாய நிலங்களை காப்புவனமாக மாற்ற, மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்னை மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக, அரசின் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

தற்போதுள்ள நிலையில், நாரைக்கிணறு பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை. எனவே, சற்று அவகாசம் கொடுங்கள். பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்,’ என்றார். இதையடுத்து, கலெக்டரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து விட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

உடனடியாக சந்திக்காதது ஏன்?

மனு அளிக்க வந்த பொதுமக்களை சந்திக்க கலெக்டர் முன்வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனு அளிக்க வந்தவர்களை போலீசார் கயிறு கட்டி தடுத்ததால், பல மணி நேரமாக இரு தரப்பினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாய சங்கத்தலைவர்கள், மாவட்ட கலெக்டர் மன்னரா? மக்களை சந்திக்க மாட்டாரா? என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டரை நேரில் சந்தித்தபோது, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அப்போது, கலெக்டரை சந்திக்க 3 மணி நேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

குழந்தைகள், பெண்கள் அனைவரும் மிகவும் சோர்வடைந்து விட்டனர் என விவசாயிகள் சங்கத்தலைவர் வேலுசாமி தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், நான் உங்களிடம் மனு வாங்க மறுக்கவில்லை. உங்களிடம் பேச ஆர்டிஓ, டிஆர்ஓவை அனுப்பினேன். நீங்கள் தான் உள்ளே வரவில்லை. காலையில் மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி கொண்டிருந்தேன். இதனால், என்னால் வரமுடியவில்லை. நாரைக்கிணறு பகுதியின் முழு பிரச்னையும் எனக்கு தெரியும் என்றார்.