Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் அரசு பள்ளிகளை போதைப் பொருள் இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும்

நாமக்கல், மே 28: அரசு பள்ளிகளை போதைப்பொருள் இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஓ உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 97 சதவீத தேர்ச்சியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 96 சதவீத தேர்ச்சியும் பெற்றது. இந்நிலையில், நாமக்கல்லில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்து, முதன்மை கல்வி அலுவலர் (பொ) பச்சமுத்து பேசியதாவது: பள்ளிகள் திறக்கும் நாளன்று, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும். கழிப்பறைகள் சுத்தமாகவும், தண்ணீர் வசதியுடனும் இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேம்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத வளாகத்தை உருவாக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே, தலைமை ஆசிரியர்கள் திட்டமிட வேண்டும். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில், ஏடிஎஸ்பி விஜயராகவன் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் வாயிலாக தடுக்கப்படும் குற்றங்கள், குழந்தைகளை பாதுகாக்கும் முறை, சட்டத்தின் மூலம் விழிப்புணர்வு குறித்து எடுத்துக் கூறினார். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் ரோஷினி, சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் மணிமேகலை, மாணவ-மாணவிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கிடைக்கும் சலுகைகள், நல உதவிகள், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள் குறித்து விளக்கி கூறினார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கற்பகம், குழந்தைகளின் உரிமைகள் பற்றி விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கொடுத்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் வஹாப், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் நன்றி கூறினார்.