Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் குறித்த குளறுபடி உத்தரவால் குழப்பம்

நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் எது? என அதிகாரிகளின் குளறுபடி உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 22 தனியார் இளம் மழலையர் பள்ளிகள், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிகள் வரும் கல்வியாண்டில் செயல்படக் கூடாது. அங்கு எல்கேஜி முதல் எந்தவொரு வகுப்பிலும் மாணவர் சேர்க்கை நடைபெற கூடாது. மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் துர்காமூர்த்தி, கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், அனுமதி பெறாத பள்ளிகளின் பட்டியலையும் கலெக்டர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டிருந்த 22 பள்ளிகளில் 10 பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் துர்காமூர்த்தியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: இளம் மழலையர் பள்ளிகள், சிறிய கட்டிட அமைப்புகளில் அல்லது பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள சட்டத்தின்படி, இளம் மழலையர் பள்ளிகளை பெரிய பள்ளிகளுக்கு இணையாக கருதி, அவற்றுக்கான விதிகளை பள்ளி அங்கீகார வழிகாட்டு படிவத்தில் வெளியிட்டு இருப்பதால், ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து இளம் மழலையர் பள்ளிகளும் மூடப்படும் அபாயம் உள்ளது. இது அடிப்படை பள்ளி கல்வியை பெரிதும் பாதிக்கும் என்பதால், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். ஏபிசிடி சான்றிதழ் பெற பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சான்றளிக்க வேண்டும்.

இதற்கு காலஅவகாசம் தேவையாகிறது என்பதை கருத்தில் கொண்டு, விதிமுறைகளை எளிமையாக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, இப்பிரச்னை குறித்து, மாவட்ட கல்வி அலுவலரை (தனியார் பள்ளிகள்) சந்தித்து பேசும் படி கூறினார். பின்னர், வெளியே வந்த தனியார் இளம் மழலையர் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், `மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எங்கள் பள்ளிகளை இதுவரை மாவட்ட கல்வி அலுவலர்கள் யாரும் ஆய்வு செய்யவில்லை.

பள்ளிகளை நடத்தக் கூடாது என்பது தொடர்பான எந்த உத்தரவும், மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து வரவில்லை. கலெக்டர் நான் எந்த உத்தரவும் வெளியிடவில்லை என்கிறார். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் பெற்றோர்கள் மத்தியில் எங்கள் பள்ளி மீதான மதிப்பு குறைய தொடங்கியுள்ளது. எனவே, தொடர்ந்து பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கவேண்டும்,’ என்றனர்.