Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம், ஜூன் 25: சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையம், ரூ.18.50 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருவதையும், சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ.2.98 கோடியில் பொம்மசமுத்திரம் ஏரியின் உபரிநீர் வெளியேறும் வாய்க்காலில் இருந்து சிவன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து தரமாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.