Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

நாமக்கல், ஜூன் 23: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தில், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, நாமக்கல்லில், தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தினமும் விகிதாச்சார அடிப்படையில், நீர்பங்கீடு செய்தால் இரு மாநிலத்திற்குள் பிரச்னைகள் வராது. மாதந்தோறும் நீர் பங்கீடு என்ற தீர்ப்பு மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கான தண்ணீரை கர்நாடகா கொடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதால், தமிழக நலன் பாதிக்காது, பாசனத்திற்கு தண்ணீர் எடுப்பதில்லை. குடிநீர் தேவைக்கு தான் தண்ணீர் எடுக்க உள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவக்குமார் கூறுகிறார். நான்கே முக்கால் டி.எம்.சி தண்ணீருக்காக 69 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதை அவர்கள் விளக்கவேண்டும். கர்நாடகா அரசின் நோக்கம் அணையை கட்டி மின்சாரம் எடுப்பது தான். மேகதாதுவில் அணை கட்டினால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் பாலைவனமாகும்.

தமிழகமும், கர்நாடகாவும் ஒற்றுமையாக இருக்க கூடாது என டெல்லியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். புதிய அரசை பொறுத்தவரை யாருக்கும் புரிதல் இல்லை. நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த்துக்கு டி.எம்.சி என்ன என்று கேட்டால் தெரியாது. தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு தபால் மூலம் அனுமதி கேட்டோம், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. அதே நேரத்தில் நடிகை, நடிகர்களை உடனே சந்திக்கிறார். அனைத்து பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், லாட்டரி தொழிலில் ஈடுபடும் ஒரே குடும்பத்தினர் பணம் அரசியலில் ஆதவ் அர்ஜூனா, லீமா ரோஸ், சார்லஸ் மார்டின் ஆகியோரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்கி உள்ளது. இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.