Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கரும்பில் பொக்கோ போயிங் கட்டுப்படுத்திட யோசனை

பள்ளிபாளையம்,ஜூன் 23: கரும்பு பயிரில் ஏற்படும் பொக்கோ போயிங் எனப்படும் குருத்து முறுகல் நோய் காணப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது. பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிபாளையம் வட்டாரத்தில் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் தட்பவெப்ப மற்றும் உயிரியல் காரணிகளால் கரும்பில் “பொக்கோ போயிங்” என்ற குருத்து முறுகல் நோயின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நோய் ஒழுங்கற்ற வடிவம் அல்லது சிதைந்த மேற்பகுதியை குறிக்கும் ஒரு சொல்லாகும்.

பியூசேரியம் வகை பூசணங்களால் உருவாகிறது. சாறு உறிஞ்சும் பூச்சியான “குருத்து மாவுப்பூச்சி” இந்நோயினை தீவிரப் படுத்துகிறது. ஏப்ரல் - ஜூலை மாதங்களில் குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதல் காணப்படுவதால் “பொக்கோ போயிங்” நோய் தாக்குதலின் தீவிரமும் அதிகரிக்கிறது. குருத்து மாவுப்பூச்சியினை தொடர்ந்து எறும்புகளின் நடமாட்டமும் தென்படும். குருத்து மாவுப்பூச்சியில் இருந்து வெளியிடப்படும் தேன் போன்ற திரவமானது கரும்படல நோய் உருவாக காரணமாகிறது. மூன்று முதல் ஏழு மாத வயதுடைய நடவுப் பயிர்களில் இந்நோயின் தாக்குதல் தென்படும். ஆனால் மறுதாம்பு பயிரில் இந்நோய் ஒரு மாதத்திலிருந்தே தென்பட ஆரம்பிக்கிறது.

வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலை மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய கோடை மழை ஆகிய சாதகமான சூழ்நிலைகள் இந்நோய் உருவாவதற்கு மிக முக்கியமாக இருக்கிறது. காற்றின் மூலம் பரவக்கூடிய இந்நோய், பாதிக்கப்பட்ட கரணைகள், மழைத்துளி, மண் மற்றும் பாசன நீர் மூலமும் பரவுகிறது. இயல்பான சூழ்நிலைகளில் இந்நோய் காரணியானது தாவரக் கழிவுகளில் 12 மாதங்கள் வரை வாழக்கூடியது. இந்த நோயை கரும்புதோகை உறித்த பின்னர் பூசண மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். எறும்புகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதலை உறுதிசெய்ய வேண்டும். குருத்து முறுகல் மற்றும் தண்டில் கத்திவெட்டு அமைப்பு ஆகிய அறிகுறிகள் தென்படுகின்ற கரும்பு பயிர்களை முற்றிலும் அகற்ற வேண்டும்.

நடவு செய்வதற்கு முன் விதைக் கரணைகளை நேர்த்தி செய்வதன் மூலம் நோய் பரவுவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு நடவு, மறுதாம்பு மற்றும் மண் அணைக்கும் போதும் பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை கரும்பு பயிர்களுக்கு அளிக்க வேண்டும். பயிர் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கரும்பு பயிர்களை நோய் காரணிகள் எளிதில் தாக்கி சேதத்தை உண்டு பண்ணுவதை தவிர்க்க கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரைபடி மருந்துகளை தெளிக்கலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் பள்ளிபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.