Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

12 ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளில், சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக வீடு, வீடாக சென்று மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். நாமக்கல் மாநகராட்சியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மரூர்பட்டி, தொட்டிப்பட்டி, வள்ளிபுரம், பாப்பிநாய்க்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், லத்துவாடி, காதப்பள்ளி, வீசானம், வேட்டம்பாடி, சிலுவம்பட்டி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. நடப்பாண்டு கோடை காலம் முடிந்தும், வெப்ப அலை வீசி வருவதால், 12 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க, மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, குடிநீர் பிரச்னை மற்றும் சுகாதார வசதிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி ஏடிசி நகர் பகுதியில், நேற்று கமிஷனர் செல்வபாலாஜி, திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. தினமும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, கமிஷனர் அந்த ஊரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து, அங்கிருக்கும் கடைசி குடியிருப்பு வரை தண்ணீர் சரியாக சென்று சேருகிறதா என்பதை பார்வையிட்டார்.

இதுகுறித்து கமிஷனர் செல்வபாலாஜி கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 12 ஊராட்சி பகுதியில், மொத்தம் 238 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் மூலம், இந்த பகுதிகளுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த தண்ணீர் 60 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மட்டுமே செல்கிறது. மற்ற இடங்களில் ஆழ்துணை கிணறுகளில் உள்ள தண்ணீர் தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை மாற்றி அனைத்து குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அனைத்து பகுதிக்கும், சீரான குடிநீர் வழங்கப்படும். மேலும், இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளுக்கு ரூ.46 கோடியில் தனி குடிநீர் திட்டம் தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், அந்த பணிகள் தொடங்கப்படும். நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 39 வார்டுகளுக்கு, குடிநீர் விநியோகத்திற்காக காவிரி ஆற்றில் இரண்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன. அதன் மூலம் தினமும் 360 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இவை மாநகரில் உள்ள சுமார் 54 ஆயிரம் குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்புகளுக்கு 2 தினங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, காவிரியில் நீர்வரத்து குறைந்த போதிலும், மாநகராட்சி குடிநீர் திட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலம், தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழை பெய்துவிட்டால் பிரச்னை இல்லை. அதுவரை மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்