Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வள்ளிபுரம் பைபாஸ் சாலையில் மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்கள்

நாமக்கல், மே 19: முறையான பேருந்து நிறுத்தம் இல்லாததால், வள்ளிபுரம் பைபாஸ் சாலையில் மேம்பாலம் வழியாக பஸ்கள் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நாமக்கல் முதலைப்பட்டியில், புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மதுரை, கரூர் போன்ற நகரங்களில் இருந்து நாமக்கல் வரும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வருவதில்லை. அதற்கு பதிலாக வள்ளிபுரம் பைபாஸ் சாலை வழியாக, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறது. கரூர், மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் மக்கள், வள்ளிபுரம் பைபாஸ் சாலையில் இருந்து பஸ் பிடிக்கும் வகையில், அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த பிரச்னை பல மாதமாக இருந்து வருகிறது.

பேருந்து நிறுத்தம் பகுதியில், அடிப்படை வசதியான நிழற்கூடம், பயணிகள் அமர இருக்கைகள் போன்ற வசதிகள் இல்லாததால், மக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வள்ளிபுரம் பைபாஸ் சாலையின் மற்றொரு பகுதியில் இருந்து நாமக்கல், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போன்ற பகுதிகளுக்கு டவுன் பஸ்கள், குறிப்பிட்ட இடைவெளியில், காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பகுதியிலும், நிழற்கூடம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பஸ்கள் பைபாஸ் சாலையின் குறுக்கே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது.

ஒரு நிமிடத்திற்கு 50க்கும் அதிகமான கார்கள், பஸ்கள், கனரக வாகனங்கள் இந்த சாலையை அதிவேகத்தில் கடந்து செல்வதால், டவுன் பஸ்களை பிடிக்க செல்லும் மக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து, டவுன் பஸ்களை முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பிரச்னையில் எந்த கவனமும் செலுத்தவில்லை. மேலும் கரூர், மதுரையில் இருந்து நாமக்கல் வரும் பெரும்பாலான பஸ்கள், பைபாஸ் சாலை மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. இதனால், பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல புதிய பஸ் ஸ்டாண்டு தான் வரவேண்டியுள்ளது.

இதனால் பல மணி நேரம் வீணாகிறது. இந்த பிரச்னை குறித்து, பயணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பைபாஸ் சாலையின் மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்களை, இணைப்பு சாலை வழியாக இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாள்தோறும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.