பள்ளிபாளையம், ஆக.18: பள்ளிபாளையத்தில் இரவில் மட்டும் இயங்கி, கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் சாக்கடையில் வெளியேற்றிய சாய ஆலையின் மின்சாரத்தை, மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் துண்டித்தனர். பள்ளிபாளையம் சாய ஆலைகளை, 2 மாதங்களுக்கு முன்பு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றிய 20 சாய ஆலைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், பள்ளிபாளையம் பகுதியில் முறைகேடாக இயங்கிய பல சாயச்சாலைகள் சாயமிடும் பணியினை நிறுத்தி வைத்தன. தொழில் நடத்துவதற்கான இணக்கமான சூழ்நிலைக்காக இந்த சாய ஆலைகள் காத்திருந்தன. இந்நிலையில், 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆவத்திபாளையம் சுப்பிரமணியம் சாயச்சாலை இரவு நேரத்தில் இயங்குவதாகவும், கழிவுநீரை குளோரின் வாயு மூலம் கலர் நீக்கி, சாக்கடையில் வெளியேற்றுவதாக புகார் எழுந்தது.



