நாமக்கல், ஆக.18: நாமக்கல்லில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறை 2 நாளில் அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாமக்கல் நகரில் பொதுமக்கள், விபத்தின்றி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமுறை மீறலை தடுக்கவேண்டும் என்ற நோக்கில், போக்குவரத்து காவல்துறை சார்பில், சேலம்-திருச்செங்கோடு ரோடு சந்திப்பில் அதிநவீன கேமரா கடந்த மாதம் பொருத்தப்பட்டது. இந்த கேமரா மூலம், டூவீலர்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களை கண்டறிந்து, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை முயற்சி நடைபெற்றுள்ளது. இன்னும் ஓரிரு நாளில், அதிநவீன கேமரா மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை மாவட்ட எஸ்பி யாதவ் கிரிஸ் அசோக் தொடங்கி வைக்க உள்ளார்.இதையொட்டி, நேற்று நாமக்கல் நகரில் போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நகரில் உள்ள சிக்னலில் காத்திருக்கும் பொதுமக்களிடம் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணிந்து டூவீலரில் செல்லவேண்டும். காரில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும். இல்லாவிட்டால் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று காலை முதல் மாலை வரை நகரின் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் மூலம் செய்யப்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார், நாமக்கல் நகரில் வரும் 20 அல்லது 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டவேண்டும் என தெரிவித்தனர்.



