Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் போராட்டம்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 18: நாமகிரிப்பேட்டை அருகே பெரப்பன்சோலை பகுதியில், வனப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் டிராக்டர் மற்றும் டூவீலரில் சென்று வர இந்த பாதையை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் அந்த பாதையில் குழி வெட்டி வாகனங்கள் செல்ல முடியாத வகையில், தடுப்பு ஏற்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், முள்ளுக்குறிச்சி வனத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறுகையில், `கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட வன அலுவலரிடம் முறையிட்ட போது, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பாதையில் குழி வெட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்,’ என்றனர்.

இதுகுறித்து முள்ளுக்குறிச்சி வனச்சரகர் முருகேசன் கூறுகையில், `இந்த பாதை வனத்துறைக்கு சொந்தமானது. அந்த பகுதியில் சிலர் அடிக்கடி மது அருந்தி விட்டு, புகைபிடித்த சிகரெட் துண்டுகளை வீசுவதால், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கையாக குழி வெட்டி வாகன போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் பயன்படுத்த மாற்றுப்பாதை உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்,’ என்றார்.