ராசிபுரம், ஆக. 17: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா சிங்களாந்தபுரத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி, அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இடையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த காஸ் பங்கில் வேலை செய்து வந்த முருகேசன் மகன் கலையரசன் (22) என்பவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 2025 ஜூன் மாதம், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இதில் சிறுமி கர்ப்பமானார். கடந்த 13ம் தேதி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சிறுமிக்கு 18 வயது முடியாததால், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கலையரசன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கலையரசனை தேடி
வருகின்றனர்



