நாமக்கல், ஆக.17: மோகனூர் சர்க்கரை ஆலையில் 800 கிலோ பித்தளை பொருட்கள் திருட்டு போன சம்பவத்தில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த மாதம் சுமார் 800 கிலோ பித்தளை திருட்டு போனது. இது தொடர்பாக, ஆலை நிர்வாகம் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. மேலும், பித்தளை திருட்டு தொடர்பாக 5 பேரை சஸ்பெண்ட் செய்தது. ஆனால், இதுவரை புகாரின் பேரில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை.
திருட்டு போன பித்தளை பொருட்களை ஈடுகட்டுவதற்காக, பல்வேறு இடங்களில் இருந்து பித்தளை பொருட்களை கொண்டு வந்து, மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. போலீசார் உடனடியாக விரைந்து விசாரணை மேற்கொண்டு இருந்தால், திருடுப் போன பொருட்களை கண்டிப்பாக மீட்டெடுக்க முடியும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும். ஆனால், அரசு கூட்டுறவு நிறுவனம் அளித்த புகாரில் மெத்தன போக்கு மன வேதனையை அளிக்கிறது. எனவே, 800 கிலோ பித்தளை பொருட்களை திருடியவர்கள் யார், யார்? எந்த வண்டியில் ஏற்றிச்செல்லப்பட்டது, எங்கு விற்கப்பட்டது என உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.



