Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 தனியார் பஸ்கள் மீது வழக்கு

பரமத்திவேலூர், ஜூலை 17: நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த சில தினங்களாக பயணிகள் ஏறி இறங்கும் தூரத்தைப் பொறுத்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட ரூ.3 முதல் ரூ.10 வரை அதிகரித்து டிக்கெட் வசூல் செய்கின்றனர். பஸ் கட்டண உயர்வு குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் தன்னிச்சையாக பயண கட்டணத்தை உயர்த்தி இருப்பதை அறிந்த கலெக்டர் மதுபாலன் பஸ் கட்டண கட்டணத்தை உயர்த்தியுள்ள பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பேருந்தின் பர்மிட் ரத்து செய்வதோடு வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினார். ஆனாலும் கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அதிக கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று பரமத்திவேலூரை சேர்ந்த பயணி ஒருவர் பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு தொலைபேசி மூலம் புகாரளித்தார். அதில் நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் வரும் தனியார் பஸ்சில் தன்னிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் நேற்று பரமத்தி பகுதியில் நாமக்கல்லில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் திருச்செங்கோட்டில் இருந்து வரும் தனியார் பஸ்களை நிறுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தார். அப்போது ரூ.3 முதல் ரூ.8 வரை அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது.

இதனை அறிந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சம்பந்தப்பட்ட 2 பஸ்கள் மற்றும் கண்டக்டர், டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தார். அதை தொடர்ந்து வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலித்தால், பர்மிட் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை அனுப்பி வைத்தார்.