Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிபுரம் நகர வளர்ச்சிக்காக ரூ.10.58 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் திறக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ராசிபுரம், ஜூலை 16: ராசிபுரம் நகரின் வளர்ச்சிக்காக ரூ.10.58 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சேலம் நகராட்சிக்கு அடுத்தபடியாக உருவானது ராசிபுரம் நகராட்சி. ஆனாலும், ராசிபுரம் நகரம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இதற்கு பின்பு உருவான நாமக்கல், திருச்செங்கோடு நகராட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. அதே வேளையில் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறைந்த பகுதியாக ராசிபுரம் நகரம் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராசிபுரம் நகரை நோக்கி, கல்விக்காக வந்து சென்றனர். நகரில் குறுகலான சாலைகள், சாலைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு, நகரின் ஒரு வழிப்பாதையாக மாற்றி விடப்பட்டது. ஆனால், அப்போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.மீண்டும் பழைய முறையிலேயே போக்குவரத்து இயக்க வேண்டும் என சில அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராசிபுரம் நகராட்சி பகுதியில் நகரை விட்டு வெளியே அணைப்பாளையம் பகுதியில், புதிய பஸ் நிலையம் கட்ட நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்தது. இதற்காக தனியார் நிலத்தினை தானமாக பெற்று, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகருக்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையான, அனப்பாளையம் பைபாஸ் அருகே பஸ் நிலையம், ரூ.10.58 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் 56 கடைகளும், 30 பஸ்கள் ஒரே சமயத்தில் வந்து நிற்கும் அளவிற்கான இட வசதிகளும், 2 உணவு விடுதிகளும், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திச் செல்ல சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கார் பார்க்கிங், நேர காப்பாளர் அறை, பாதுகாப்பிற்காக காவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் கழிப்பிட வசதிகள், அதிநவீன சிசிடிவி கேமரா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. புதிய பஸ் நிலையத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தான், ராசிபுரம் நகரம் மேம்படும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.