பள்ளிபாளையம், ஆக.10: பள்ளிபாளையம் அருகே, மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், 10 நாட்களாக பஸ்களில் சுற்றித்திரிந்த கொள்ளையன், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதால், வேறு வழியின்றி நேற்று வெப்படை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை காமராஜர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம்(50). வீட்டின் அருகே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவரது தாய் சம்பூரணம்(75) உடன் தங்கியிருந்தார்.
கடந்த 30ம் தேதி காலை, சுப்பிரமணியம் கடைக்கு சென்ற போது, திருச்செங்கோடு ஆனைமலை கரட்டை சேர்ந்த தச்சு தொழிலாளி தினேஷ்(26), அவரது தம்பி திவாகர்(24) ஆகியோர், வீடு புகுந்து மூதாட்டி சம்பூரணத்தை அரிவாளால ்வெட்டி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது, வீட்டிற்கு வந்த சுப்பிரமணியத்தையும் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர், சுதாரித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து தப்பினார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.




