Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு

நாமக்கல், ஜூலை 8: நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆர்டிஓக்கள் சோதனையில் கட்டண உயர்வு அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் அரசு பஸ்களுக்கு இணையாக அதிகளவில் இயக்கப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, துறையூர் போன்ற நகரங்களுக்கு தினமும் அதிகளவிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் கடந்த 5ம் தேதி முதல் திடீரென டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு ரூ.7 வரையும், ஈரோட்டிற்கு ரூ.8 வரையும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு ரூ.10 டிக்கெட் கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 பெறப்பட்டது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணிகள் பஸ் கண்டக்டரிடம் கேட்டபோது, அரசு பஸ்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் வழித்தடத்தில் இயக்கப்படும் கட்டணத்தை நாங்களும் பெறுகிறோம் என கூறினர். கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் நாமக்கல், திருச்செங்கோடு வட்டார அலுவலகத்தின் மூலம் பர்மிட் பெற்ற அனைத்து தனியார் பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுபாலனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் தனியார் பஸ் உரிமையாளர்கள் இஷ்டத்திற்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர், நேற்று மாலை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் தனியார் பஸ்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், செந்தில், திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் உமா ஆகியோர் நேற்று மாலை நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் தனியார் பஸ்களை நிறுத்தி அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பார்த்தனர். அதில் கூடுதலான கட்டணம் அச்சிடப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது பற்றி, கண்டக்டர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரித்தபோது, பஸ் உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வாங்கும்படி கூறியதால், உயர்த்தியுள்ளோம் என தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவர்கள் கூறியதை அப்படியே எழுதி வாங்கி கொண்டு அவர்களை எச்சரித்தனர். தனியார் பஸ்களுக்கு என்று அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் கட்டணத்தை மட்டும் தான் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து நேற்று மாலை முதல் மீண்டும் பழைய கட்டணத்திற்கு தனியார் பஸ் கண்டக்டர்கள் மாறினர். தனியார் பஸ் உரிமையாளர்கள் தன்னிச்சையாக, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது பற்றி தனியார் பஸ் உரிமையாளர்ளின் கருத்து கேட்க அச்சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதிலளிக்க மறுத்தனர்.