Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகாரிகள் இரவில் திடீர் சோதனை: எருமப்பட்டி ஊருக்குள் தனியார் பஸ்கள் இயக்கம்விதிமீறினால் நடவடிக்கை என ஆர்டிஓ எச்சரிக்கை

நாமக்கல், ஜூலை 6: போக்குவரத்து துறை அதிகாரிகள் இரவில் நடத்திய திடீர் சோதனையை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் எருமப்பட்டி ஊருக்குள் செல்லத் துவங்கியுள்ளன. விதிமுறைகளை மீறி பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ எச்சரித்துள்ளார். நாமக்கல்லில் இருந்து துறையூருக்கும், துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் அனைத்தும், எருமப்பட்டி ஊருக்குள் செல்வதில்லை, அதற்கு பதில் கைகாட்டி பகுதியில் பஸ்களை, டிரைவர்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாக மாவட்ட கலெக்டர் மதுபாலனிடம், அப்பகுதி மக்கள் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தனர்.

எருமப்பட்டி செல்வதற்குரிய பஸ் கட்டணத்தை பஸ் கண்டக்டர்கள் வாங்கி கொண்டு, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வராமல், கைகாட்டி பகுதியில் மக்களை இறக்கி விடுவதால், பொதுமக்கள் கைகாட்சி பகுதியில் டவுன் பஸ்சுக்கு காத்திருந்து ரூ.7 செலவு செய்து, ஊருக்குள் செல்ல வேண்டியுள்ளதாக அந்த புகாரில் கூறியிருந்தனர்.இந்த பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, அனைத்து பஸ்களும் எருமப்பட்டி ஊருக்குள் சென்று வர ஏற்பாடு செய்யும்படி, தெற்கு வட்டார போக்குரவத்து அலுவலர் முருகேசனுக்கு, கலெக்டர் மதுபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு எருமப்பட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் கைகாட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனைத்து தனியார் பஸ்களும் கைகாட்டி பகுதியில் நிறுத்தி, பயணிகளை இறக்கி விடுவது தெரியவந்தது.

இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், தனியார் பஸ் டிரைவர்களை அழைத்து பர்மிட் படி பஸ்களை இயக்க வேண்டும். அனைத்து பஸ்களும் கட்டாயம் எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று தான் பயணிகளை இறக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து தனியார் பஸ்கள் அனைத்தும் எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டனர். இது குறித்து நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் கூறுகையில், `தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசிடம் பெற்ற வழித்தட பர்மிட் அடிப்படையில் பஸ்களை இயக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலையில் மக்களை இறக்கி விடக்கூடாது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். தற்போது அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும் எருமப்பப்டி ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.