சேந்தமங்கலம், நவ.5: கொல்லிமலை அடிவாரம், வரகூர் பகுதியில் பலத்த மழையால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சந்தனப்பாறை அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொல்லிமலை அடிவார பகுதியான சேந்தமங்கலம் அடுத்த காரவள்ளி, எருமப்பட்டி அடுத்த வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை முழுவதும் பலத்த மழை பெய்தது.
அடிவாரப் பகுதியான வரகூரில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த பலத்த மழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து அங்குள்ள மஞ்சள், கரும்பு, சோளம், சின்ன வெங்காயம், நெல் வயல்களில் புகுந்தது. விளை நிலங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக வரகூர் மலை அடிவார பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு நீர்வீழ்ச்சிகள் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `நீர் வழி ஓடை பகுதியை தூர் வாராமல் உள்ளதால் தண்ணீர் முழுவதும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
நீர் வழி ஓடை பகுதியை அரசு தூர்வாரி தண்ணீர் முழுவதும் ஏரிகளுக்கு செல்லுமாறு அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதனால், கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து ஆய்வு செய்து எருமப்பட்டி அடிவார பகுதியில் உள்ள நீர்வழி ஓடைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படும்,’ என்றனர்.


